ந.ஜெயகாந்தன்
வடக்கில் ஆவா குழு இன்னும் செயற்படுகின்றதா என்பது தொடர்பாக உறுதியாக கூற முடியாதுள்ளதாகவும் ஆனால் அங்கு அண்மையில் நடைபெற்ற பொலிஸார் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் முன்னாள் ஆவா குழு உறுப்பினர்கள் எனவும் பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது வடக்கில் பொலிஸார் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஊடகவியலாளர்களினால் பொலிஸ் பேச்சாளரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும் அவரின் பதில்களும் வருமாறு;
கேள்வி: யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு தொடர்பாக பார்க்கும் போது பொலிஸாருக்கு சவால்கள் காணப்படுகின்றது போன்றுதானே உள்ளது?
பதில்: துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கோப்பாய் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் அவர்களின் இருவரை கைது செய்துள்ளோம். நல்லூரை சேர்ந்த திவராசா மதுசன் , விஜேரட்னம் ஜீவராஜ் ஆகியோரே இவர்கள். இந்த இருவரும் ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினர்களாவர். அத்துடன் கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் கைது செய்யப்படவுள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர்.
கேள்வி: இதற்கு முதல் ஆவா குழுவை தாங்கள் ஒழித்துவிட்டதாகவே கூறப்பட்டது. ஆனால் இன்னும் அவர்கள் கைது செய்யப்படுகின்றார்களே?
பதில்: ஆவா குழுவென்ற குழு இப்போது செயற்படுகின்றதா என்பது தொடர்பாக எங்களுக்கு உறுதியாக கூற முடியாது. ஆனால் ஆவா குழுவின் முன்னாள் உறுப்பினர்கள் கைது செய்யப்படும் போது பிணையில் விடுதலை செய்யப்படலாம். நாங்கள் விசாரணை நடத்தி வருகின்றோம்.
கேள்வி: இவர்களுடன் எல்.ரீ.ரீ.ஈ க்கு தொடர்புகள் உள்ளனவா ? இவர்கள் தமிழரா? சிங்களவர்களா?
பதில்: உறுதியாக கூற முடியாது. அந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவர்கள். அத்துடன் பிரதான சந்தேக நபர் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர் என தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment