பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாகவும், தொழிற்பயிற்சி நிலையங்களை மலையக பகுதிகளில் அமைப்பது தொடர்பாகவும், எமது நாட்டின் ஜி.எஸ்.பி.வரிச் சலுகை தொடர்பாக டென்மார்க் அரசாங்கத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றதாக கல்வி இராஜாங்க அமைச்சரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் நேற்று (03.08.2017) ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் கல்வி இராஜாங்க அமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க வருகை தந்துள்ள டென்மார் நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் டிரோல்ஸ் ரவின்ஸ் கலந்து கொண்டார்.
அவருடன் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சமூக ஜனநாயக கட்சியின் நிர்வாக செயற்பாட்டாளருமான தர்மகுலசிங்கம், கனடா நாட்டை சேர்ந்த கனடா பெரிய சிவன் ஆலயத்தின் தர்மகர்த்தாவும், உலக சைவத் திருச்சபையின் சைவத் தலைவருமான கலாநிதி அடியார் விபுலாநந்தா கல்வி இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செய்லாளர் எம்.துரைசாமி ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன்,
எனது அழைப்பின் பேரில் டென்மார்க் நாட்டினுடைய பாராளுமன்ற உறுப்பினர் டிரோல்ஸ் ரவின்ஸ் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அவரிடம் நாங்கள் கடந்த காலங்களில் மலையக பகுதிகளில் டென்மார்க் அரசாங்கத்தின் அரச சார்பற்ற நிறுவனங்கள் பல பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வந்தது. அவை தற்பொழுது இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதனை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம்.
அது மட்டுமல்லாமல் பெருந்தோட்ட பாடசாலைகள் தொடர்பாகவும் அதiனுடைய அபிவிருத்தி தொடர்பாகவும் ஜீ.எஸ்.பி வரிச்சலுகை தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளோம். பாராளுமன்ற உறுப்பினர் டிரோல்ஸ் ரவின்ஸ் எமது நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஜனாதிபதி பிரதமர் ஆகியோரையும் சந்திப்பதற்கும் திட்டமிட்டுள்ளார்.
அது மட்டுமன்றி அவரை எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்றத்திற்கும் அழைத்துச் சென்று அங்கு ஒரு சில அமைச்சர்களையும் உறுப்பினர்களையும் சந்திப்பதற்கும் திட்டமிட்டிருக்கிறோம்.
எனவே ஜனநாயக நாடுகளின் பட்டியலில் மிகவும் முக்கிய இடத்தில் இருப்பது டென்மார்க் நாடாகும். எனவே அவர்களுடன் மிகவும் நெருக்கமான ஒரு உறவை பேணவேண்டிய தேவை எமக்கு இருக்கின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment