Chandra Mohan ஜூலை 4 - இளவரசன் நினைவு நாள்
# நினைவுகள் அழிவதில்லை #
மாதொரு பாகன் புகழ் திருச்செங்கோட்டில் மலர்ந்தும் மலராத கோகுல்ராஜ் - பிரியதர்சினி காதல் கதையை, கொங்கு சாதி வெறி யுவராஜ் கும்பல், கோகுல்ராஜை கோரமாக கொலை செய்தது மூலம் முடிவுக்கு கொண்டு வந்து விட்டது ; கொலை வழக்காக மாற்றுவதற்கான தொடர் முயற்சிகளின் வெற்றிக்கு பிறகு உடல் அடக்கமும் நடந்து முடிந்துவிட்டது. சாதி வெறியர்களின் கவுரவுக் கொலைகள் என்று தணியும் என்று மனதை பிடித்தாட்டிக் கொண்டிருக்கும் பொழுது, வாழப்பாடி அருகே சோமம்பட்டி தலித் குடியிருப்பு தாக்கப்பட்டதற்கு பின்னணியான சரவணன்-வன்னியப்பிரியா காதல் திருமணத்தின் மீதான சாதி வெறிசக்திகளின் வன்மம்.....கும்பல் வன்முறைத் தாக்குதலுக்கு முடிவு கட்டியே தீர வேண்டும் என்ற கோபத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.இந்த நினைவுகளெல்லாம் மனதை வாட்டிக் கொண்டு இருக்கும்போது...
இளவரசன் இரண்டாவது ஆண்டு நினைவு நாள் வந்து சேர்ந்து மன உளைச்சலை அதிகப்படுத்துகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஜீலை 4ந் தேதியில், தருமபுரியில் நிகழ்ந்த இளவரசனின் அகால மரணம் தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கியதை மறந்து விட முடியாது.இளவரசன்-திவ்யா காதல் கதை சாதீய வெறியர்களால் முடித்து வைக்கப்பட்ட வரலாறும் நினைவுகளில் இருந்து அழியாதவையாகும்.
தலித்--வன்னியர் சாதி மறுப்புக் காதலை பொறுத்துக் கொள்ள முடியாத சாதி வெறிக் கூட்டம், பா.ம.க வினரின் அரசியல் ஆதாயத்திற்காக கட்டமைக்கப்பட்ட வன்முறைத் தாக்குதலில் பங்கேற்று, 2013ம் ஆண்டு நவம்பர் 7ல் நாயக்கன் கொட்டாய்,கொண்டம்பட்டி, அண்ணா நகர் தலித் காலனிகளைத் தாக்கி எரித்து நாசப்படுத்தியதை மறக்கமுடியாது. திருப்பூர் குணா மூலமாக தகவல் கேள்விப் பட்டதும் தருமபுரிக்கு விரைந்தோம். தோழர்.முருகனின் உதவியோடு, CPIML கட்சி மாநில செயலாளர் பாலசுந்தரம் தலைமையில் உண்மை அறியும் குழுவாக போலீஸ் கெடுபிடிகளை மீறிச் சென்று நிலைமையை ஆய்வு செய்தோம். தொடர்ந்து ஏதிர்ப்பு நிகழ்ச்சிகளையும் கட்டமைத்தோம்.
சாதிவெறிச் சக்திகளின் சதிகள், சூழ்ச்சிகள் ஒருபுறம், நீதிமன்றங்களின் சதிராட்டம் மறுபுறம், இளவரசனை தருமபுரியில் ரெயில்வே தண்டவாளத்திற்கு அருகில் பிணமாகத்தான் பார்க்க முடிந்தது. அன்றிரவு தனது செய்தியை அனுப்பி விட்டு, என்னிடம் பேசிய ஆங்கில நாளேட்டின் செய்தியாளர் ஒருவர் "எனது சகோதரன் ஒருவனை இழந்தது போலத் தவிக்கிறேன் " என்று கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டதை மறக்க முடியாது. "எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்க வேண்டும் தோழர் ? " என்று முருகன் கலங்கியதையும் மறக்க முடியவில்லை.
"80 களில் தருமபுரியின் வறுமையின் அடையாளங்களாக கந்து வட்டியும், பஸ் நிலையம் அருகே தள்ளு வண்டியில் பழைய சாதம் விற்பதும் இருந்தன. நக்சல்பாரி இயக்கம் தான் தீர்வு என்பதில் வன்னியர், தலித் இரு தரப்பு ஏழைகளும் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தனர். சாதி மறுப்பு திருமணங்கள் ஏராளம். சாதி கடந்த உறவுகள் மேலோங்கின. அப்பு, பாலன் சிலைத் திறப்பு நிகழ்ச்சிக்கு சாதி கடந்து தோள் மேல் கை போட்டு, ஆயிரக் கணக்கில் அணிவகுத்தனர். ML இயக்கத்தின் சரிவும்,சாதிய சக்திகளின் எழுச்சியும்....புரட்சியாளர்களும் பா.ம.க.வில் போய் சேர்ந்ததும்...இன்றைய தருமபுரி அன்றைய தருமபுரி அல்ல, வன்னியரில் ஏராளமான பணக்காரர்கள் தோன்றி இருப்பதையும், அவர்களது நலன்களும் சேர்தது தான் மொத்த பிரச்சினையும்..." என்று அவரோடு விவாதித்தையும் மறக்க முடியாது.
கடந்த ஆண்டு இளவரசன் முதலாண்டு நினைவு நிகழ்ச்சியைக் கூட நடத்த விடாது, தோழர்களை, ஜெயா அரசாங்கமானது NSA வில் கைது செய்ததையும், அதைக் கண்டித்து சேலத்தில் பொது விசாரணை ஏற்பாடு செய்ததையும், போலீஸ் கெடுபிடிகளை மீறி தோழர்.இரமணி தலைமையில் பெண்கள் பங்கேற்றதை மறக்க முடியாது.
#*** தலித்துகள் மீதான கும்பல் வன்முறை, கவுரவக் கொலைகள் ஆகியற்றைத் தடித்திடும், பலமானதொரு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் உடனடி அவசியம்...
பல்வேறு சாதிகளின் முற்போக்கு, சனநாயக சக்திகளை உள்ளடக்கிய சக்திவாய்ந்த சனநாயக இயக்கம் /சாதி மறுப்பு இயக்கம் ....
குறுகிய உட்சாதி உணர்வுகளைக் கடந்த தலித்துகளின் ஒற்றுமை...
அடக்குமுறைகளுக்கு எதிராக தலித் அறுதியிடல்/எழுச்சி...
இளவரசன் நினைவை அர்த்தமுள்ளதாக ஆக்கிடுவோம்!
இளவரசன் நினைவை அர்த்தமுள்ளதாக ஆக்கிடுவோம்!
No comments:
Post a Comment