பொலிசாரின் உத்தரவை மீறி மணல் ஏற்றிச் சென்ற கன்டர் வாகனம் மீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் யோகராசா தினேஸ் எனும் 25 வயது நபர் மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் உப பொலிஸ் பரிசோதகர் சிவராசா சஞ்ஜீவ மற்றும் அபுதாரி மொஹமட் முபாரக் ஆகிய இரு பொலிசாரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வடமராட்சி கிழக்குப் பகுதியில், வல்லிபுரம் ஆலயத்துக்குச் செல்லும் சாலையில் குடத்தனை 6ம் கட்டையை அண்டிய பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றதோடு, சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தார் என்றும் பொலிஸார் மறித்தபோதும் அவர் நிற்காத காரணத்தாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றும் பொலிஸ் தரப்பால் கூறப்பட்டது.
உயிரிழந்தவரின் உடல் மந்திகை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆத்திரமடைந்த மக்கள், மந்திகை மருத்துவமனைக்கு வந்த பருத்தித்துறைப் பொலிஸாரின் ஜீப் மீது கற்களால் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
கைது செய்யப்பட்ட இரு பொலிசாரும், பருத்தித்துறை நீதிமன்றில் இன்று (10) ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு, அவர்கள் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)
(படங்கள்: சுமித்தி தங்கராசா)
No comments:
Post a Comment