Tuesday, 8 August 2017

தமிழ் ஊடகங்கள் மலையகத்தை புறக்கணிக்கிறது? வடகிழக்குக்கு கொடுக்கும் முக்கியத்துவம்?

Arun Wengadesh முகநூலில் இருந்து< மதிப்புமிக்க தமிழ் ஊடகங்களே…ஊடகவியலாளர்களே.. இலங்கையின் தமிழ் ஊடக வரலாறு என்பது மிக ஆரோக்கியமான பாதையின் வழி வந்த நகர்வாகும்.மலையகத்தின் ஆரம்ப கால அடிமை வாழ்க்கை மாற்றத்திற்கும்,மலையக மக்களின் விழிப்புணர்விற்கும் பத்திரிகைகள்,வானொலிகள்,தொலைக்காட்சிகள் பாரிய அளவில் பங்களிப்பு வழங்கி இன்றை சுதந்திர தமிழ் ஊடக தளத்திற்கு வழி செய்தது என்றால் மிகையாகாது.< ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் பாராட்டி புகழ்வதற்கு பல்வேறு கால கட்ட நிகழ்வகளின் பதிவுகள் உண்டென்றாலும் அது யாவரும் அறிந்ததே… ஆனால் இன்றைய கால கட்டத்தில் மலையகத்திற்கான ஊடகங்களின் பங்களிப்பு எவ்வாறானது என்பதை நாம் தெளிவுபடுத்திக் கொள்ளுதல் அவசியமாகிறது. பிரத்தியேகமாக மலையகத்திற்கான அச்சு ஊடகங்கள் சிறப்பான முறையில் இயங்கி வந்தாலும் தேசிய ரீதியில் மலையகத்தை அடையாளப்படுத்தும் ஊடகங்கள் மலையகத்திற்கான பங்களிப்பை சரிவர செய்கிறதா? என்பது கேள்விக்குறிதான். நானும் ஊடக துறை சார்ந்தவன் என்ற நினைப்போடும் இலங்கையின் மூத்த பத்திரிகையான வீரகேசரி பத்திரிகையில் குறுகிய காலத்தில் பல்வேறு விடயங்களை கற்றுக் கொண்ட மாணவன் என்கிற வகையிலும் எனது கருத்தை நேரடியாக கூற முடியும் என நினைக்கிறேன். என்னை பொருத்தவரை வீரகேசரி பணியில்தான் நான் அதிகமான விடயங்களை கற்றுக் கொண்டேன்.அங்கு தான் என ஊடக ஆசிரியர்கள் இருக்கிறார்கள்,அதே போன்று
தினக்குரல்,உதயசூரியன்,சூரியகாந்தி,தினகரன்,தமிழ்மிரர்,சுடரொளி,மற்றும் சக்தி,சூரியன்,வசந்தம்,இவ்வாறு ஒவ்வோரு ஊடகத்திலும் எனக்கு கற்று தந்தவர்கள்,நண்பர்கள் என நிச்சயமாக யாரோ ஒருவர் இருக்கிறார்கள்.
ஆகவே என்னை ஏற்றுக் கொண்டு இந்த எழுத்துக்களை மலையகத்தின் வேண்டுகோளாக எடுத்துக் கொள்ளவும்.
08.08.2017 இன்றைய வீரகேசரி,தினகுரல்,தமிழ்மிரர் மற்றும் தினகரன் பத்திரிகைகளை முழுவதுமாக படித்ததில் வடக்கு கிழக்கு மற்றும் இந்திய செய்திகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மலையகத்திற்கு வழங்காததன் காரணம் யாதென அறிந்து கொள்ள பிரியப்படுகின்றேன்.
ஒவ்வோரு பத்திரிகையும் 7,8,9,6 என்கிற அடிப்படையில்தான் செய்திகளை மலையகத்திற்கென ஒதுக்கியிருக்கிறது.ஆனால் இதனை விடவும் இந்திய செய்திகள் இரு மடங்காக வெளிவந்திருப்பது வேதனையளிக்கிறது.மேலும் இந்த எண்ணிக்கையில் மலையக அரசியல் தலைவர்களின் அறிக்கைகைள்,செய்திகள்தான குறிப்பிட்டு சொல்லக் கூடியதாகவும் இருக்கிறது.
இதற்கு பத்திரிகை ஆசிரியர்கள்,நிர்வாகம்; மட்டுமல்ல பிரதேச ஊடகவியலாளர்களும்,நிருபர்களும் என்பது தொடர்பாகவும் நாம் அறிவோம்.
ஆனால் பிரதான ஆசிரியர்கள் கவனம் செலுத்தும் பட்சத்தில் மலையகத்தில் கட்டாயமாக எழுத வேண்டிய,காட்சிப்படுத்தபட வேண்டிய,தீர்க்கப்படவேண்டிய, அடையாளப்படுத்தப்படவேண்டிய ஏன் கொண்டாடவேண்டிய பல்லாயிரக்கணக்கான செய்திகள் புதைந்து கிடக்கின்றது.
செய்தித் தாள்களின் நியமிக்கப்பட்ட குழுக்களை அனுப்புவதன் மூலமும்,மலையகத்தின் மீது அக்கரையும்,உணர்வும் கொண்ட பிரதேச ஊடகவியலாளர்களை உருவாக்குவதன் ஊடாகவும்,சமூக ஊடககங்களின் மூலமாகவும் மலையகத்தை அப்படியே படம் பிடித்து பதிவு செய்வது நிச்சயமாக சாத்தியமாகும்.
அதே போன்று தொலைக்காட்சிகள்,வானொலிகள் கொப்பி பேஸ்ட் ஊடகங்களாக மாறி வருவது மிக்க கவலையாக இருக்கிறது.
ஏற்கனவே டிஸ்டீவி மயத்தால் இந்தியாவின் தமிழகமாக உருவெடுத்து வரும் மலையகத்தின் சில பகுதிகளில் இலங்கையின் செய்திகளை விடவும் தமிழ்நாட்டு செய்திகள்தான் அதிகம் அறிந்திருக்கிறார்கள்,
அதையும் தாண்டி இலங்கை தமிழ் தொலைக்காட்சிகள் வானொலிகள் இந்தியாவின் பிராந்திய அலைகளாக பாவித்து தமக்கான பாணியை மறந்து தழுவி நிற்பது ஊடக வரலாற்றுக்கே ஆரோக்கிமற்றதாகும்.
தென்னிந்தியாவிற்கு அறிவிப்பாளர்களை அனுப்பி வைத்தவர்கள் நாம்.நம்நாட்டில் புதிதான பாணிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்,செய்தியாளர்கள்,ஊடக துறையினரை உருவாக்குவதுதான் நமக்கான பெருமை.தேவையும் கூட.
நம்மை சர்வதேசத்திற்கு அடையாளப்படுத்த வேண்டுமாயின் நாம் மற்றவர்களுடைய ஜெராக்சாக இருந்தால் இயலாது என்பது எனது வாதம்.
ஆகவே என் கருத்துக்களில் தவறிருந்தால் உங்கள் மாணவனாக கருதி மன்னிக்க வேண்டுகிறேன்.
நிச்சயமாக நமது ஊடகங்கள் கெத்தாக நிற்பதைதான் நாங்கள் விரும்புகிறோம்.
அதற்கு நிறைய அர்பணிக்கவேண்டும் என்பது உள்ளர்த்தம்.
- அருன் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...