Tuesday, 8 August 2017

மனோ கணேசன் : நெருப்போடு விளையாடவேண்டாம் ... வடகிழக்கு அநியாயங்களை தட்டி கேட்டவன் நான்!

மலையக குருவி :நெருப்புடன் விளையாட வேண்டாம்...! Don't Play with Fire...!
நல்லிணக்க அமைச்சர் மனோ கணேசனின் முகநூலிலிருந்து...
வெளிநாட்டில் இருந்து அசிங்கமாக பிரதேசவாதம் பேசிய ஒருநபரின் முகநூல் கணக்கு உணர்வாளர்களின் முயற்சியால் முடிவுக்கு வந்துள்ளது. உண்மையில் முட்டாள்தனமாக உளறிய நபர் இங்கே பேசப்பட வேண்டியவர் அல்ல.
ஆனால், சமீப காலமாக மலையக தமிழர் தொடர்பில் வேறு பல்வேறு தரப்புகளில் இருந்து பாதகமான சமிக்ஞைகள் வருவது தமிழின ஒற்றுமைக்கு நல்லதல்ல. தமிழீழ விடுதலை புலிகளின் நிர்வாகத்தில் காணப்படாத பிரதேசவாதம் இப்போது எங்கே இருந்து தலை தூக்குகிறது?
பாரம்பரிய பிரதேசங்களை அடிப்படையாக கொண்ட மண்வாசனை வரலாறு என்பது பிழையானது அல்ல. தமிழினத்துக்குள் வடக்கு, கிழக்கு, மலையகம் என்ற வெவ்வேறு பாரம்பரிய மண்வாசனை வரலாறுகள் இந்நாட்டு தமிழரிடையே இருக்கின்றன.
இவை மண்வாதங்கள். மலைநாட்டில் வசீகர மலைக்குளிர் தென்றல் முகத்தில் வீசும். மட்டக்களப்பில் மீன் பாடும். வன்னியில் யானை பிளிரும். யாழ் குடா, தமிழ் கலாச்சார தொட்டிலாகும். இவை வேறு. பிரதேசவாதம் என்பது வேறு. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ள கூடாது.
பிரதேசவாதம் என்பது ஒன்றை ஒன்று மேலாண்மை செய்ய முனைவது ஆகும். அதன் மேலாண்மை சிந்தனைகளுக்கு புதிய தலைமுறை தமிழினத்தில் இனி இடமில்லை. நான் புதிய தலைமுறை தமிழன் என்றே என் அரசியல் பயணத்தை ஆரம்பித்தேன். அப்படியே இன்னமும் இருக்கின்றேன்.
இந்த கச்சை சிவம் என்ற மனிதன் ஒரு அடையாளம்தான். பொதுவாக திடீரென கிளம்பியுள்ள இந்த பிரதேசவாத கருத்தோட்டத்தை கண்டிப்பதில், தனக்குள்ள பொறுப்பை வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் தலைமை கவனத்தில் கொள்ள வேண்டும். நியாயத்துக்கும், அநியாயத்துக்கும் இடையில் நடுநிலைமை என்ற ஒன்று இல்லை. இங்கே வெற்று மௌனம் என்பது அநியாயத்துக்கு துணை போவதாகும்.
வடக்கு கிழக்கில் அநீதி இழக்கப்படும் போது நான் ஒருபோதும் நடுநிலைமையை கடைபிடித்து அமைதியாக இருக்கவில்லை. ஆகவே, எவரையும் விட எனக்கு இதுபற்றி பேச உரிமை உள்ளது. ஆனால், தம் அரசியல் தேவைகளுக்காக பிரதேசவாதம் பேசுவது, வடக்கு கிழக்குக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல.
நான் மலைநாட்டுக்கு சென்று அரசியல் பேசும் போது, “கொழும்பு தமிழன்” இங்கே வரகூடாது என்று சொல்லும் அரசியல்வாதிகள் குளிர் தென்றல் வீசும் நுவரெலியாவில் இருக்கின்றார்கள்.
நான் ஒரு நாடோடி தமிழன். எல்லா நாடும், என் நாடுதான்; எல்லா ஊரும், ஊர்தான். என் இந்த அரசியல் வரலாறு தெரியாத அரசியல் சிறுவர்கள் அதை அறிந்துக்கொள்ள வேண்டும்.
பிரதேசவாத பிரிவினைவாதம் இனியும் சகித்துக்கொள்ள முடியாதது ஆகும். எழுதி வைத்துக்கொள்ளுங்கள்! தமிழின ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் எந்த ஒரு பிரதேசவாத நடவடிக்கையையும் இனி நான் பொறுத்துக்கொள்ள போவது இல்லை. எமது ஒற்றுமை என்பது நெருப்பாகும். ஆகவே, பிரதேசவாதிகளுக்கு நான் சொல்வது, "நெருப்புடன் விளையாட வேண்டாம்", என்பதே!

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...