இந்த ‘கள்ளத்தோணி பறத்தமிழ்’ அமைச்சனின் பொதுமக்கள் சந்திப்பு...!> இந்த நொடியில் என் மனதில்...01/09/17
கொழும்பு புறநகர் ஜயவர்தனபுர கோட்டே பகுதி. ஒரு பின்தங்கிய தோட்டம். பத்து ஏழை தமிழ் குடும்பங்கள். பெரும்பாலும் பெண்கள். அங்கே அவர்களுக்கு தண்ணீர் பெற ஒரு கிணறும், அதற்கு முன் ஒரு சிறு முற்றமும் உள்ளது.
ஒரு பெரும்பான்மை இனத்து மனிதன், அடாத்தாக தோட்டத்துக்குள் நுழைகிறான். முதல்நாள், முற்றத்தை ஆக்கிரமித்து, கூடாரம் கட்டி குடியேறுகிறான். இரண்டாம் நாள், கிணற்றையும், கொன்கிரீட்டால் மூடி, அந்த இடத்தையும் ஆக்கிரமிக்க முயல்கிறான்.
அந்த அப்பாவி பத்து தமிழ் குடும்ப பெண்கள் கோட்டே ஜயவர்தனபுர மாநகரசபை, பொலிஸ் என்று அதிகாரிகளின் பின்னால் இரண்டு வாரம் ஓடித்திருந்து களைத்து விட்டார்கள். வேறுவழியில்லாமல், அவர்களில் ஒரு சிலர், அந்த ஆக்கிரமிப்பு பெரும்பான்மை இனத்தவனிடம் கேள்வி கேட்ட போது, தூஷணமும் பேசி, “கள்ளத்தோணி, பறத்தமிழ் பெட்டை நாய்கள், மண்டைகளை உடைப்பேன். முடிந்தால் போ, போய் அந்த கள்ளத்தோணி பறத்தமிழ் அமைச்சனிடம் சொல்” என்று கல்லெறிந்து விரட்டுகிறான்.
ஆகவே, நேற்று வியாழக்கிழமை பொதுமக்கள் தினத்தன்று என்னை பார்க்க என் அமைச்சுக்கு அப்பெண்கள் பரிதாபமாக வந்து காத்து நின்றார்கள். விஷயத்தை புரிந்துக்கொண்டவுடன், கோட்டே ஜயவர்தனபுர மாநகரசபை ஆணையாளரையும், அப்பகுதி பொலிஸ் பொறுப்பதிகாரியையும் என் அமைச்சு அலுவலகத்துக்கு உடன் வரச்சொல்லி பணித்தேன். அரைமணியில் ஓடி வந்து விட்டார்கள்.
பாதிக்கப்பட்ட பெண்களின் முன்னிலையில், எனது கறார் விசாரணையின் பின், இப்பிரச்சினையில், தங்கள் கவனயீனத்தை அதிகாரிகள் ஒப்புக்கொண்டார்கள். உடன் இந்த ஆக்கிரமிப்பாளனை அகற்றுகிறோம் என்று ஆணையாளரும், அதற்கு வேண்டிய பொலிஸ் பாதுகாப்பை தருகிறோம் என காவல்துறையும் ஒப்புக்கொண்டு போனார்கள்.
நிம்மதி பெருமூச்சு விட்டபடி பரிதாபமாக நின்ற அந்த பெண்களிடம், “சரி..., கடந்த தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள்” என சும்மாதான் சிரித்தபடி கேட்டேன்.
பரிதாபமாக என்னை பார்த்து முழித்தார்கள் அவர்களிடம் ஏற்கனவே பேசி விட்ட என் உதவியாளர் சொன்னார். “இல்லை சார். அவர்கள் யானைக்கு வாக்கு போட்டார்களாம். பிரதமருக்கும், ஹர்ஷா சில்வாவுக்கும், ரோசிக்கும் போட்டார்களாம். உங்களை மறந்துவிட்டார்களாம்.”
“சரி, பரவாயில்லை. இனிமேல் நீங்கள் விரும்பினாலும்கூட எனக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பம் உங்களுக்கு வராது.” என்று அவர்களை தட்டிக்கொடுத்து வழியனுப்பி வைத்துவிட்டு, இந்த ஆக்கிரமிப்பாளன் அகற்றப்படுவதை கண்காணித்து எனக்கு அறிக்கை தரும்படி என் உதவியாளருக்கு சொன்னேன்.
இது இந்த ‘கள்ளத்தோணி பறத்தமிழ்’ அமைச்சனின், நேற்று நடந்த, வியாழக்கிழமை பொதுமக்கள் தின சந்திப்பு தினசரி வாடிக்கை நிகழ்வுகளில் ஒன்று.
No comments:
Post a Comment