“கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” அஞ்சா நெஞ்சமும் மலையையே அசைக்கும் உடல் வலிமையும் கொண்ட இராவணனின் மனம் கடன்பட்டவர் போல காயப்பட்டதை அறிந்துள்ளோம். கடன் என்பது வலிமையான மனிதனையும் வலுவிழக்க செய்யும் ஒன்று என்பதனை இதன் மூலம் புரிகிறது. கடன் வாங்குவதும் கொடுப்பதும் எல்லா சமூகத்திற்கும் பொதுவான ஓர் விடயமாக இருந்தாலும், மலையகத்தில் இன்று அன்றாட பசியை போக்குவதற்கும், ஜீவனோ பாயத்திற்கும் கடனுக்கு மேல் கடன் வாங்கும் நிலை உருவாகியுள்ளதை தாராளமாக காணலாம்.
கடன் பெற்று வாழ்வை வளமாக்கும் ஒரு தரப்பினர் இருக்க, இவர்கள் கடன் பெற்று தமது வாழ்வை அன்றாடம் கேள்விக் குறியாக்கி வருகின்றனர். தோட்டத்தொழில்களில் எதிர்பார்த்த ஊதியம் கிடைக்காத நிலையில், பெறும் சிறு தொகை சம்பளத்தையும் வாசலிலேயே கடன் கொடுத்தோர் பிடுங்கி செல்லும் நிலை தொடர்கிறது. சுமார் 2 வருடங்களாக தமது அன்றாட சாதாரண தேவைகளை பூர்த்தி செய்யக்கூட மாதச்சம்பளம் கிடைக்காமல் போனமையும், இதனை ஈடுசெய்ய வேறு வருமான வழிகள் இன்று காணப்படாமையுமே கடன் எனும் கடலுக்குள் இவர்கள் மூழ்க முக்கிய காரணமாய் அமைந்தது எனலாம்.
இவர்களின் வறுமையை பயன்படுத்த பலர் கடன் கொடுக்க முன் வந்து, வட்டிக்கு வட்டி வாங்கி “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி” வருகின்றனர். தோட்ட துரைமார்கள் ஒரு சில வங்கிகளில் கடன் பெற்றுக் கொடுத்து சம்பளத்தில் அன்றாட தேவைக்கு காசு இருக்கிறதோ இல்லையோ கடனை வட்டியுடன் வெட்டிக் கொள்கின்றனர். தொழிலாளர்களை திருப்திப்படுத்துவதாக கூறி வேறு திசைக்கு அவர்களின் வாழ்க்கையை திருப்புகின்றனர்.
வேறு சில நிறுவனங்கள் துரத்தித் துரத்தி கடன் வழங்கி பெருந்தொகை வட்டியை வசூலிக்கும் நிலையும் தொடர்கிறது. அதுமட்டுமன்றி வேறு மாகாணங்களில் உள்ளோரும் இன்று தொழிலாளர்களின் ஏழ்மையை பயன்படுத்தி கடன் கொடுத்து அதிக வட்டியையும் முதலையும் பிடுங்கி செல்கின்றனர். இவர்கள் தோட்டங்களுக்கு ஓரிரு இடைத் தரகர்களை கொண்டு இயக்குகின்றனர். பணம் கிடைக்காதவர்களிடம் போலிஸ், வழக்கு என இவர்களுக்கு புரியாத வார்த்தைகளை பேசி மிரட்டி அன்றாட உணவுக்கு உள்ள பணத்தையும் வாங்கி செல்லும் கொடுமையான நிகழ்வுகளையும் தற்போது தோட்டப் புறங்களில் காணக்கூடியதாக உள்ளது. கடன் கொடுப்போரின் ஒரே நம்பிக்கை வட்டியாக இவர்களிடம் பெருந்தொகையை கறந்துவிடலாம் என்பதும், மீண்டும் தமது வலைக்குள் இவர்களை வீழ்த்திச் சம்பாதிக்கலாமென்பதுமாகும்.
இதனை விட ஒரு கோஷ்டியினர் கடனை வழங்கி தினமும் வட்டியை மாத்திரம் வாங்கிச் செல்லும் ஓர் தந்திரமும் காணப்படுகிறது.
தோட்டத் தொழிலாளர்கள் தமது வீட்டு கல்லாப் பெட்டியில் பணம் இல்லாவிட்டாலும், கொழும்பு நாராஹென்பிட்டியில் தமது EPF. ETF, Service பணம் இருப்பதாக நிம்மதி அடைந்த காலம் மலையேறி விட்டது. தற்போது ஒரு சிலர் தவிர அதிகமானோர் இந்த நிதியங்களிலிருந்து கடன் பெற்று விட்டனர். அல்லது முற்றாக இந்தப் பணத்தை துடைத்து விட்டனர் என்றே கூற வேண்டும். இதைத் தவிர பண்டிகை கடன்கள், நிவாரண கடன்கள், நகர்ப்புறத்தில் உள்ள ஒரு சில தனவந்தர்கள் கொடுக்கும் பணம் தோட்டத்திற்குள்ளேயே வாங்கிக் கொள்ளும் கடன்கள் என பட்டியல் தொடர்கிறது. பொதுவாக ஓர் அரச தனியார் துறைசார்ந்த ஊழியர்களுக்கு கடன் வழங்கும் போது தனது அடிப்படை சம்பளத்தில் 40 வீதம் கட்டாயமாக அவரது அன்றாட தேவைக்குப் போக மேலதிக தொகையிலேயே கடன் அறவிடப்படுகிறது. இது இவர்களது வாழ்வாதாரத்தையும் தொழில் செய்யும் மன நிலையையும் பாதுகாக்கும் செயல் முறையாக அமைகிறது. ஆனால் தொழிலாளர்களுக்கு கடன் வழங்குவோர் அவர்களது வருமானத்தையோ பின்னணியோ பார்ப்பதில்லை. கடன் கட்ட, வேறொரு கடனை பெற்று பணத்தை வட்டியுடன் கட்ட ஆலோசனை வழங்குகிறார்கள். இவர்களின் நோக்கம் மீண்டும் மீண்டும் இவர்களை கடனுக்குள் வைத்திருந்து சம்பாதிப்பதேயாகும்.
தொழிலாளர்களும் வேறு வழியின்றி தாம் இக்கடன்களை பெற்றுக் கொள்ள காரணமாக அமைபவை எதிர்பார்த்த சம்பளம் கிடைக்கும், கடனை அடைத்து விடலாம் என்ற நப்பாசை, வருமானத்திற்கு மீறிய செலவுகளுக்கு தம்மை பழக்கப்படுத்தி கொண்டமை, மாற்றுத் தொழில்களுக்கு தயாரின்மை ஒன்றை இழந்து இன்னொன்றை பெற நினைத்து வாழ்தல், புதிய கலாசாரங்களை தம்முடன் இணைத்துக் கொள்ளல். சில வியாபார தந்திரங்களுக்கு ஆளாகுதல், அன்றாட வாழ்வை ஏதாவது ஒரு வழியில் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலை என்பனவே இவர்களை வாழ்க்கை முழுவதும் கடன் சுமைக்கும் தள்ளுவதற்கு ஏதுவாக அமைகின்றன.
இதனால் குடும்பங்களில் பிரச்சினைகள், தற்கொலை முயற்சிகள், வாங்கிய பொருளை விற்கும் நிலை, எந்நேரமும் கடன் பற்றிய சிந்தனைகள் என்பன வாட்டி வதைக்கின்றன. மிக முக்கியமாக மேலதிக வருமானம் ஒன்றின் தேவைக்கருதி படிக்கும் வயதில் உள்ள பிள்ளைகள் வீட்டுத் தொழிலாளிகளாகவும், கடைத்தெருவுக்கு கூலிகளாக அனுப்பப்படும் நிலையும் காணப்படுகிறது.
இந்நிலையிலிருந்து மீள்வதற்கு உடனடியாக மாற்று வேலைத்திட்டங்களும், எண்ணங்களுமே தற்போதைய தேவையாக உள்ளது. இது தொடருமேயானால் தேயிலை தொழிற்துறை தொடர்ச்சியாக எதிர்பார்த்த திருப்தியை தராத பட்சத்தில் மலையகத்தில் அடுத்தடுத்த சந்ததியினரும் கடன் வாங்கும் கலாசாரத்திற்கு தள்ளபட்டு பெரும் பொருளாதார சீரழிவை காணும் நிலை ஏற்பட வாய்ப்புண்டு.
இதற்கு இவர்கள் ஒரு சில அர்ப்பணிப்புகளையும், மாற்று சிந்தனைகளையும், புதிய தேடல்களையும் தமக்குள் ஏற்படுத்திக் கொள்ளல் இக்கால சூழலுக்கு பொருத்தமானது. தமது வருமானத்தை கொண்டு செலவு செய்து, சேமித்தும் வாழ்ந்த எமது மூதாதையினர் கடன் வாங்குவதை ஓர் கௌரவ பிரச்சினையாக நினைத்தனர். காந்திய கொள்கைகளை கடைபிடித்த பலர் அப்போது பல சிறு கைத்தொழில்களில் வருமானம் ஈட்டினர். கோப்பி செய்கை, கால் நடை வளர்ப்பு, தளபாட உற்பத்தி, பயிச்செய்கை,வாசனை பொருட்கள் உற்பத்தி போன்றவற்றை தாமாக மேற்கொண்ட இவர்கள் “கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை இன்றி வாழப்பழகிக் கொள்’’ என வாழ்ந்தனர். அம்மாக்களின் முந்தானை முடிச்சுகளும், பாட்டியின் சுருக்குப் பையும் எப்போதுமே ஆட்டம் காணாத கஜானாக்களாக காணப்பட்டதை யாரும் மறக்க முடியாது. முன்னோர்கள் சிறந்த பொருளாதார நிபுணத்துவத்தை கொண்டிருந்தனர். கொத்து கொத்தாக தங்கத்தை சேர்த்துள்ளனர். அதுவே இன்று பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் வழிவழியாக திருமணம் செய்ய உதவுவதையும் காணலாம். இன்று ஒரு சில சேகரிப்புகள் இருந்தாலும் ஒன்றை இழந்தே பெறும் நிலையே பெரும்பாலும் காணப்படுகிறது. அவர்கள் அன்று சேகரித்த வெண்கலப் பொருட்களுக்கும் இன்றும் சிறந்த சந்தை வாய்ப்பு உள்ளது.
“இந்தியாவின் இதயம் கிராமப்புற மக்கள் என கூறிய மகாத்மாக காந்தி அவர்கள் கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை கைத்தொழில்களைக் கொண்டு உயர்த்த வேண்டும்’’ என்றார். இவரது 3H கல்விக் கொள்கையும் மாணவர்கள் மத்தியில் கைத்தொழில் தூண்டல்கள் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. முன்னோர்கள் கடைப்பிடித்த காந்திய கொள்கை வருமானம், சிக்கனத் திட்டங்கள், உணவு, சேமிப்பு என்பனவற்றை நாம் மீண்டும் சற்று திரும்பி பார்த்தல் வேண்டும். தற்போது தோட்டங்கள் அனைத்தும் புற்காடுகளாக காணப்படும் நிலையில் கால் நடை வளர்ப்பிற்கு பொருத்தமான சூழல்களும் உள்ளன.
இந்நிலையில் கால் நடைகளுக்கும், அதன் உற்பத்தி பொருட்களுக்கும் நல்ல கிராக்கி நிலவும் பட்சத்தில் தொழிலாளர்கள் அதிகம் வருமானம் தரும் தொழிலாக இதனை மேற்கொண்டு தமது வருமானத்தை பெருக்கிக் கொள்ளலாம்.
இன்று தோட்டங்கள் அனைத்தும் கிராமங்களாக மாற்றப்பட வேண்டும் என சகல தலைமைகள் மத்தியில் குரல் கொடுக்கும் அதே வேளை கிராமிய பொருளாதார அத்தி வாரங்களை நாம் கற்றுக் கொள்ளல் அவசியமாகின்றது.
“ பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு” ஒன்று ஏற்படுத்தப்பட்டதன் நோக்கமே கிராமிய சூழலையும் அதன் உள்ளக வசதிகள், கட்டமைப்புகளை தோட்ட புறங்களில் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயேயாகும். இதன் மூலம் அபிவிருத்திகள் காலத்துக்கு காலம் ஏற்பட்டுக் கொண்டிருந்தாலும், பொருளாதார அபிவிருத்தியை மையப்படுத்தி ஒழுங்கமைக்கப்பட்ட விரிவான திட்டங்கள் தற்போதைய மலையக மக்களின் தேவையாகவும் உள்ளது.
தோட்ட தொழிற்துறை நலிவடைந்து செல்லும் இந்நிலையில் மக்கள் சுய தொழிலை செய்வதற்கு போதுமான நேரங்கள் காணப்படுகின்றன. மாதத்தில் அரை வாசி (15) நாட்கள் வீட்டில் இருக்கும் நிலையே தற்போது அதிகமான தோட்டங்களில் காணப்படுகிறது. இவ்வாறான காலங்களை மாற்றுத் தொழில்களுக்கு பயன்படுத்த முடியும். கால்நடை விவசாயம், தையல், வீட்டுத் தளபாட உற்பத்தி, கிராமிய கைத்தொழில்கள், வாகனத்திருத்தம், சிறுவியாபாரம் போன்ற துறைகளில் ஈடுபடுவதால் தமது அன்றாட பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். மாற்றுத் தொழில்களை நாடி செல்லும் போது எம்மிடையே பேரம் பேசும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. தோட்ட தொழிற்துறைகளிலும் மாற்றம் ஏற்படவும் சந்தர்ப்பம் அதிகமாகிறது.
மலையக மக்கள் சுயமாக சிந்திக்கவும், வருமான மூலங்களை அறிந்து செயற்படவும்,புதிய சந்தை வாய்ப்புகளையும், தொழிற்வாய்ப்புகள், பொருத்தமான கடன் திட்டங்கள், ஆலோசனைகள், பிரதேச சபைகளின் பொருளாதார அபிவிருத்தியை பெற்றுக்கொடுத்தல், தொழிற்நுட்பங்களை அறிந்து கொள்ளவும், வாய்ப்புகளை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்படுத்தி கொடுப்பதே தற்போதைய தேவையாக உள்ளது.
உழைத்து பணம் பெறுவதை விட கடன் வாங்கி இலகுவாக பணத்தை தேடலாம் என எண்ணம் மறைய சகல தரப்பும் உதவுதல் இங்கு முக்கியமாகின்றது. தோட்ட தொழிற்துறையை காப்பாற்றுதல், வேலை நாட்களை அதிகரித்தல், அதிகரித்த சம்பளம் என்ற கோரிக்கைகளோடு சேர்த்து இம்மக்களை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பும் ஏனைய தொழிற்துறைகளிலும் காலூண்ட செய்தல் மிக அவசியமானதும் அவசரமானதுமாக காணப்படுகிறது.
அம்மாசி இராதாகிருஷ்ணன்
நன்றி - வீரகேசரி
No comments:
Post a Comment