Saturday, 9 September 2017

இயக்குனர் ரஞ்சித் பேச்சு .... பல அபத்தங்களை கொண்டிருக்கிறது .. சாதி சங்கங்களிடம் கேட்க வேண்டியதை ....

Vallialagappan Alagappan : இயக்குநர் பா.ரஞ்சித்தின் உணர்வுகளோடு ஒன்றுபடுகிறேன். ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்தவர் என்கிற அடிப்படையில் அவர் ஒடுக்கப்படுவதாக உணரும் அதே தன்மையை என்னால் முழுமையாக உணரமுடியாவிட்டாலும், பல்வேறு களங்களில் வெவ்வேறு விதமான ஒடுக்குமுறைகளை சந்தித்திருப்பவன்/சந்தித்துக் கொண்டிருப்பவன் என்கிற முறையில் ரஞ்சித்தின் குமுறல்களை புரிந்துக்கொள்ள இயலுகிறது.
அதே நேரம், அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசிய இந்த பதினைந்து நிமிடப் பேச்சு எவ்வளவு அபத்தமான வெளிப்பாடு கொண்டிருக்கிறது என்பதையும் அவர் புரிந்துக்கொள்ள வேண்டும். அவரது இந்தப் பேச்சை கேட்டுவிட்டுதான் அவருக்கான ஏகோபித்த ஆதரவுக்குரல் இணையத்தில் எழுந்திருக்கிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. யாரோ கோர்வையாக பத்து நிமிடம் ‘சித்தாந்தம்’ மாதிரி பேசிவிட்டால் சிந்திக்காமலேயே கைத்தட்டும் போக்குதான் இது. முன்பு ஈழப்பிரச்சினையில் சீமான், தமிழருவி போன்ற அரைவேக்காடுகளை ஊடகங்கள் தேவதூதர்களாக சித்தரித்ததும் இதேமாதிரி சூழலில்தான்.
1. தமிழகத்தில் சாதி இருக்கிறது என்பது ரஞ்சித்தின் கண்டுப்பிடிப்பு அல்ல. அது அனைவருக்குமே தெரிந்ததுதான். ஆனால்- அந்த சாதிமுறையை எதிர்ப்பவர்களும் இந்தியாவிலேயே கணிசமாக தமிழகத்தில்தான் இருக்கிறார்கள்.
2. ‘நீட்’டுக்கான தமிழகத்தின் இந்த போராட்டமே அர்த்தமற்றது என்றால் என்ன அர்த்தம் என்று புரியவில்லை. இந்தியாவுக்கு முதல் பெண் மருத்துவரை வழங்கிய மாநிலம், அந்த மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காமல் ஒரு குழந்தை தற்கொலை செய்துக்கொள்ளும்போது வேறென்ன செய்ய வேண்டும் என்று ரஞ்சித் எதிர்ப்பார்க்கிறார்.
3. சேரிகளின் தெருக்களுக்கு பெரியார், காமராஜர் பெயர்கள் சூட்டப்படுவதில் ரஞ்சித்துக்கு என்ன பிரச்சினையென்று தெரியவில்லை. அம்பேத்கரின் பெயர் இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்று அவர் கருதுவாரேயானால் அதை தமிழகம் தவிர்த்த இந்தியாவுக்கு சொல்லட்டும். கடந்த ஐம்பதாண்டுகளில் ‘அம்பேத்கர் நகர்’ இல்லாத நகரம் ஏதேனும் தமிழகத்தில் இருக்கிறதா? சந்தேகமிருந்தால் கூகிள் கூட செய்து பார்த்துக் கொள்ளுங்களேன். அம்பேத்கருக்கு சென்னையில் கட்டப்பட்ட மணிமண்டபம் போன்ற சிறப்பான அமைப்பு வேறெங்காவது செய்யப்பட்டிருக்கிறதா? கவுண்டனோ, வன்னியனோ, தேவனோ, நாயுடுவோ, பிள்ளையோ, பார்ப்பனனோ.. யாராக இருந்தாலும் சென்னையில் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில்தான் பயின்றாக வேண்டும். பாராட்ட வேண்டாம் ரஞ்சித். உண்மையை திரிக்கலாமா?
4. பார்ப்பன கருத்தியலுக்கு ஆட்பட்டு தமிழ் சமூகமே குழந்தைகளுக்கு சமஸ்கிருதப் பெயர்தான் வைக்கிறது என்று மட்டையடியாக அடிக்கலாமா? ரஞ்சித், தன் குழந்தைக்கு மகிழினி என்று பெயர் சூட்டுகிறார் என்றால் நானும் தமிழ்மொழி என்றுதான் என் குழந்தைக்கு பெயர் சூட்டுகிறேன்.
5. பெரியார் பெயரை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றால், யார் பெயரை வைத்து அரசியல் செய்ய வேண்டும்?
6. தமிழனாய் இணைய வேண்டும் என்பதில் உங்களுக்கு என்ன பிரச்னை? ஒடுக்கப்பட்டோர் அனைவரையும் ஒன்றிணைத்துதான் இங்கே தமிழன், திராவிடன் என்று சொல்கிறோம். அதில் நாங்கள் இல்லை என்று சொல்ல கிருஷ்ணசாமிக்கோ, ரஞ்சித்துக்கோ யார் அதிகாரம் கொடுத்தது? சாதி சங்கம், சாதிக்கட்சி நடத்துபவர்களிடம் கேட்கவேண்டிய கேள்வியை பொதுப்படையாக அனைவரையும் நோக்கி கேட்பது சரியா?
7. ஒரு குறிப்பிட்ட பிரச்னைக்கு போராட்டம் நடந்துக் கொண்டிருக்கும்போது அதற்கு உரம் சேர்ப்பதை விட்டுவிட்டு, உலகம் தோன்றியதிலிருந்து இருக்கும் பிரச்னைகளை பட்டியலிட்டு, இந்தப் போராட்டத்தின் தீவிரத்தை கேள்விக்கு உள்ளாக்குவது எவ்வகையில் நியாயம்?
8. தமிழகத்தின் இடைநிலை சாதிகளுக்கும், தாழ்த்தப்பட்டோருக்குமான பிரச்னை கவலைக்குரியதே. முற்றிலுமாக களையப்பட வேண்டியதே. பெரியார் பிறந்த இந்த மண்ணிலே அந்த இடைவெளி இடைவிடாத பகுத்தறிவுப் பிரச்சாரங்களின் வாயிலாகதான் குறையுமே தவிர, இடைவெளியை அதிகரிக்கச் செய்யும் ‘காலச்சுவடு’தனமான தலித்திய கருத்துகளால் ஏற்படாது.

No comments:

Post a Comment

Esther Nathaniel : தேய்ந்த சப்பாத்துக்களின் ஊடே தெரியும் வறுமை முகம்

கெக்கிராவ மடாட்டுகமவில் இந்த மாதம் தரம் பத்தில் கல்விக்கற்றம் மாணவி தொடர்ந்து மூன்று நாள் உணவின்றி வாந்தி எடூத்ததை தொடர்ந்து அவளை அப்பாட...