வறட்சி நிவாரண திட்டத்தில் மலையக தோட்ட பகுதி மக்களும் உள்வாங்கப்பட வேண்டும். தோட்ட பகுதி மக்களுக்கும் திட்டமிட்ட குடிநீர் விநியோக திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என த.மு.கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய வேலுகுமார் எம்.பியின் உரையில் தெரிவித்ததாவது,
'இன்று எமது நாட்டின் ஏறக்குறைய 19 மாவட்டங்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் பிரதானமாக விவசாய பயிர்ச்செய்கை பாதிப்படைந்து இருக்கின்றது. அதனால் இப்பிரதேச மக்கள் வாழ்வாதார பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர். அதுமட்டுமன்றி இதன் மறுபக்கமாக குடிநீர் பிரச்சினை பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய வறட்சி சூழலில் பல்வேறு பாதிப்புக்களை மலையக தோட்ட பகுதி மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். ஆனால் அவை இங்கு வெளிக்காட்டப்படாதிருக்கின்றது.
குறிப்பாக திட்டமிட்ட நீர்வழங்கல் திட்டங்கள் தோட்ட பகுதிகளில் இல்லாததால் பாரிய குடிநீர் பிரச்சினையை தோட்ட மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். மலையக தோட்ட பகுதிகள் நீர்வளம் மிக்க நீரேந்து பிரதேசங்களாக காணப்படுகின்றது. இவ் வளத்தை மையமாக கொண்டு பெருமளவான குடிநீர் விநியோக திட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இத்திட்டங்களில் இருந்து கிராம பகுதி மக்களும் நகர பகுதி மக்களுமே பயனடைகின்றனர். தமது கண்ணெதிரேயே இருக்கின்ற நீர் வளத்தை தமக்கு பயன்படுத்திக்கொள்ள முடியாத, வேறு பிரிவினரால் சுரண்டப்படுகின்ற துர்ப்பாக்கிய நிலைக்கு தோட்ட மக்கள் தள்ளப்பட்டு இருக்கின்றனர்.
கண்டி மாவட்டத்தின் சங்குவார் தோட்ட பகுதியில் இருந்து கம்பளை நோக்கி கிராம, நகர பகுதிகளுக்கு நீர்விநியோகம் நடைபெறுகின்றது. ஆனால் அதற்கு அண்மையில் இருக்கின்ற சங்குவார் தோட்டம், அட்டபாகே தோட்டம், சோகம தோட்டம் போன்ற பல இடங்களில் குடிநீர் பிரச்சினை உக்கிரமாக உள்ளது.
அதே போன்று நாவலபிட்டிய இம்புல்பிட்டிய தோட்டத்தில் இருந்து நாவலபிட்டிய நகர் நோக்கி நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் இம்புல்பிட்டிய தோட்ட மக்கள் குடிநீர் வசதி இன்றி தவிக்கின்றனர். எனவே மலையக தோட்ட பகுதிகளுக்கும் திட்டமிட்ட நீர் வளங்கள் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.
மலையக தோட்ட பகுதிகளில் வறட்சி காரணமாக தேயிலை கொழுந்து குறைவடைந்திருக்கின்றது. இதனால் போதுமான அளவு நாட்கள் தோட்ட தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கப்பெறாதுள்ளது. எனவே அவர்களும் வாழ்வாதார பிரச்சினையை எதிர்நோக்கி உள்ளனர். அரசினால் வழங்கப்படும் வறட்சி நிவாரண திட்டத்தில் எமது தோட்ட மக்களும் உள்வாங்கப்பட வேண்டும். அதன் போதே அரசினால் மேற்கொள்கின்ற இப்பாரிய வறட்சி நிவாரண கொடுப்பனவு திட்டம் முழுமையாக வெற்றியடையும்.'
No comments:
Post a Comment