அத்துடன், 20 ஆவது அரசியலமைப்பின் நோக்கம் என்னவென்பது நாட்டுக்கு தெளிவுப்படுத்தப்படாத பட்சத்தில், மாகாண சபைத் தேர்தல்களை காலம் தாழ்த்துவதற்கான முயற்சியொன்றாகவே அது பார்க்கப்படும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்கள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே சுமந்திரன் இந்த விடயங்களை குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் பேசுகையில்:
"இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதன் மூலம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை இந்த வருட இறுதிக்குள்ளோ அல்லது அடுத்த வருட ஆரம்பத்திலோ நடத்த முடியும். உள்ளூராட்சி மன்றங்கள் தான் கிராம மற்றும் நகர மட்டங்களில் மக்களுடன் நெருங்கி பணியாற்றும் ஆட்சி நிறுவனங்களாக இருக்கின்றன.
இந்த புதிய தேர்தல் முறைமை இன்னுமொரு பரிசோதனை முயற்சியாக இருக்கும். ஏனெனில், 60 தொகுதிவாரி முறைமையும் 40 சதவீதம் விகிதாசார முறைமையும் கொண்ட கலப்பு முறையாக இது காணப்படுகிறது. இதனுள் 25 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவமும் உள்வாங்கப்பட்டுள்ளது. இதுவொரு பரிசோதனை முயற்சியாகும்.
பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் பரந்தளவிலான இணக்கம் காணப்பட்ட முறையாக இது காணப்படுவதால் இந்த முயற்சியில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன். புதிய அரசியலமைப்பு முயற்சிக்கான ஆழ்ந்தாராய்வுகள் நடைபெறும் நிலையில், இது பல கட்சிகளின் இணக்கம் காணப்பட்ட முறையாகும்.
இந்த கலப்பு தேர்தல் முறை முதலில் பாராளுமன்ற தேர்தலுக்காகத் தான் கொண்டு வரப்பட்டது. தற்போது அது முதலாவதாக உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்த வகையில், இந்த புதிய தேர்தல் முறைமையை பாராளுமன்றம், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் என மூன்று மட்டங்களிலும் கொண்டு வருவது தொடர்பில் நாம் கலந்தாலோசித்துள்ளோம்.
ஆகவே, மாகாண சபைகளையும் இந்த முறைமையின் கீழ் கொண்டு வர அரசாங்கம் செயற்பட வேண்டும்.
இதேநேரம், 20 ஆவது அரசியலமைப்பு திருத்தமானது அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவதற்கு வழி செய்கிறது. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் நோக்கம் என்னவென்பது பற்றி நாட்டுக்கு தெரிவிக்காவிட்டால், மாகாண சபைத் தேர்தல்களை காலம் தாழ்த்துவதற்கான முயற்சியொன்றாகவே அது பார்க்கப்படும்.
20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அரசாங்கம் வர்த்தமானியில் அறிவித்துள்ளது. அந்த வகையில், புதிய தேர்தல் முறைமையொன்றின் நிமித்தமான எல்லைநிர்ணய நடவடிக்கையொன்றுக்காக அன்றி வேறு எந்த காரணத்திற்காகவும் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்படக்கூடாது.
அவ்வாறு எல்லை நிர்ணய நடவடிக்கையொன்றுக்காகவும் கூட அதிகபட்சமாக ஒரு வருடத்துக்கு மட்டுமே தேர்தலை ஒத்திவைக்க முடியும். எல்லை நிர்ணய பணிகளுக்காக நியமிக்கப்படும் குழு செயற்பாட்டு காலமும் 6 மாதங்களுக்கும் 12 மாதங்களுக்கும் இடைப்பட்டதாகவே இருக்க வேண்டும். ஒரு வருடத்துக்கு மேல் செல்ல முடியாது.
அந்த வகையில், 2018 ஆம் ஆண்டுக்கு அப்பால் சென்று 2019 ஆம் ஆண்டுக்குள் எந்தவொரு மாகாண சபைக்கான தேர்தலும் பிற்போடப்பட முடியாது. இந்த அடிப்படை விடயங்களின் கீழ் தான் நாம் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு இணங்கினோம்.
இதேநேரம், 20 ஆவது திருத்தம் என்பது அரசியலமைப்பு திருத்தம் என்ற வகையில், அதை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையாக இருக்கும். அதற்கு மேலும், சர்வஜன வாக்கெடுப்பொன்று அவசியமென உயர்நீதிமன்றம் தீர்மானிக்கும் பட்சத்தில் அது அரசுக்கு சவாலான விடயமாக அமையக்கூடும்.
எவ்வாறிருப்பினும், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளை பெறுவதற்கு அரசாங்கத்திற்கு எதிரணியின் ஆதரவும் தேவையாக இருக்கும். ஆகவே, இதற்கு எதிரணியிடம் இருந்து ஆதரவை எதிர்பார்ப்பதற்கு முன்னதாக 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் நோக்கம் தொடர்பில் தெளிவாக அறிவிக்கப்பட வேண்டும்' என்று தெரிவித்தார். தினக்குரல்
No comments:
Post a Comment