இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இந்திய வம்சாவளி மலையக மக்கள் தமது சமூக நிலைமாற்றத்தளத்தை மீளாய்வு செய்து தம்மை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய காலகட்டம் இப்போது ஏற்பட்டுள்ளது. இதற்கான கலந்துரையாடல்களை இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் ஆரம்பித்தல் வேண்டும். இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் பலத்த போராட்டங்கள் விட்டுக்கொடுப்புகள் இழப்புகளுக்கு மத்தியில் தம்மை ‘மலையக மக்கள்’ எனும் பொது அங்கீகாரத்துக்குள் கொண்டு வந்துள்ளனர். இலங்கைத்தமிழர்கள் தமது பேராட்ட வியாபகத்தின் ஊடாக சர்தேச ரீதியாக தம்மை இலங்கைத் தமிழர்களாக உறுதிபட வெளிக்கொணர்ந்திருக்கும் நிலையில் இந்த மலையகத் தமிழர் என்கிற கருத்துருவாக்கம் தனித்துவமானதும் குறிப்பிடத்தக்கதுமான முன்னேற்றம் ஆகும். இதற்காக இந்த கருத்துருவாக்கத்தை ஆரம்பித்துவைத்த இலங்கை திராவிட முன்னேற்ற கழக செயற்பாட்டாளர் தோழர் அமரர் இளஞ்செழியன் அவர்களும் அதனை மக்களிடத்தில் பரவலாக கொண்டு சென்ற அரசியல் சமூக செயற்பாட்டாளரும் கல்வியாளருமான இரா. சிவலிங்கம் அவர்களும் நினைவு கூரத்தக்கவர்கள்.
அதே நேரம் இலங்கைத்தமிழர்களின் தனிநாட்டு கோரிக்கையும் சர்வதேச வியாபகமும் மலையக மக்களுக்கு இந்திய வம்சாவளி தமிழர்கள் என்கிற குறியீட்டினையும் அவசியமாக்கியுள்ளது. ஏனெனில் இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட மலையக மக்களது பிரச்சினைகளை சர்வதேச தளத்துக்கு கொண்டு செல்வதற்கு இந்தியாவின் பங்களிப்பு மலையக மக்களுக்கு அவசியமாகவுள்ளது.
இலங்கை தமிழர்களுக்கே இந்தியாவின் பங்களிப்பு அவசியமானதும் முக்கியத்துவமானதுமானதாக உள்ள நிலையில் இந்திய வம்சாவளி மலையக மக்களுக்கான இந்தியாவின் பங்களிப்பு சற்று அதிகமாகவே வேண்டப்படுகின்றது.
எனவே இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் என்கிற இன்றைய அடையாளமும் பரிமாணமும் மிகவும் அவசியமானதாக அமையும்fy;"> இந்திய வம்சாவளி மலையக தமிழர் சமூகம் தொழிலாளர் சமூகமாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தாலும் இன்று சமூக நிலைமாற்றத்துக்கு உள்ளாகி நான்கு வகுதிகளாக உள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களும் அவர்களில் தங்கிவாழ்வோரும்
எனப்படுவோரே இந்த வகுதிகளாவர்.
தற்போது தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்து
வருகின்றபோதும் அவர்களை சார்ந்து கட்டியெழுப்பப்பட்டுள்ள தொழிற்சங்க
கட்டமைப்பே ஒட்டுமொத்த மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்தவத்தை
பாராளுமன்றத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளது. தற்போது உள்ள
மலையகத்தமிழர்களான பாராளுமன்ற உறுப்பினர்களில் ஐவர் தொழிற்சங்க
பின்புலத்தோடு தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பது உன்னிப்பாக
கவனிக்கத்தக்கது.
அதே நேரம்
அண்மைக்கால சமூக அரசியல் சூழல் இந்த மலையக சமூக நிலைமாற்ற வகுதியினர்
குறித்த மீளாய்வு ஒன்றை வேண்டி நிற்கின்றது. இலங்கையில் வட கிழக்கு
பகுதியில் நடைபெற்ற யுத்தம் சகோதர இலங்கை தமிழர்களை உலகின் எல்லா
பாகத்துக்கும் புலம்பெயர்ந்தவர்களாக மாற்றியுள்ளது. அந்த வகையில் மலையகமும்
அவர்களின் புகலிடமாக மாறியுள்ளது. மனிதாபிமான ரீதியில் அந்த புலப்பெயர்வை
மலையகத்தமிழர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இந்த மலையகம் வாழ் இலங்கைத்
தமிழ் மக்கள் மலையக மக்களின் ஐந்தாவது (மேற்கூறிய வகைப்படுத்தலில்)
வகுதியினராக தற்போது இடம்பிடித்துள்ளனர் என்பதையே அண்மைக்கால நிகழ்வுகள்
காட்டுகின்றன. இது அத்தகைய புலம்பெயர் மக்களின் மீதான மலையக மக்களது
மனிதாபிமான உணர்வுகளுக்கு அப்பாலான புரிதலாக இருக்க வேண்டியுள்ளது. மலையக
மக்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்புகள் சலுகைகள் ஏன் உரிமைகள் கூட இந்த
மலையகம் சார்ந்து புலம்பெயரந்துள்;ள இலங்கைத்தமிழ் மக்களுக்கு
கிடைக்கின்றது. குறிப்பாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பு விடயங்களை
எடுத்துக்கொள்ளலாம். ஆனால் மலையக மக்களுக்காகவே கிடைக்கின்ற அந்த
வாய்ப்புக்களை பங்கிட்டுக்கொள்ளப்படுகின்றன என்பது இங்கு
கவனிக்கப்படவேண்டிய விடயமாகின்றது.
அதே நேரம் பிந்திய எழுபது எண்பதுகளில் இனவன்முறைகள் காரணமாகவும் தொழில்
நிமித்தமாகவும் மலையகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வன்னியில் குடியேறிய
இந்திய வம்சாவளி மலையக மக்கள் தமக்காகவே உள்ள வாய்ப்புக்களை அனுபவிக்க
முடியாதுள்ளதோடு யுத்தத்தின் இடப்பெயர்வின் பின்னர் மீள் குடியேற்றத்தில்
தமது காணியுரிமையை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளனர். அவர்களுக்கான காணி உரிமை
வன்னியில் மறுக்கப்படுகின்றன என்கின்ற யதார்த்தம் உணரப்படவேண்டும்.
ஏறக்குறைய நாற்பது வருடகாலம் வன்னிப்பிரதேசத்தில் வாழ்ந்தும் இன்று
அவர்களுக்கான காணி உரிமை மறுக்கப்படுவது வருத்தத்துக்குரியது. கொடிய
யுத்தத்தின் இறுதிகட்டம் வன்னியில் வாழ்ந்த மலையக மக்களையே அதிகம்
பாதித்தது என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகவுள்ளது. தற்போது மீள்
குடியேற்றமும் இவர்களையே பாதிக்கின்றது. இவர்களை மலையக மக்களின் ஒரு
வகுதியினராக ஏற்றுக்கொள்ளும் நிலை இன்று உள்ளதா? அதற்கான வாய்ப்புகள்
உண்டா?
அதே நேரம் புலம்பெயர்ந்து மலையகத்தில் வாழும் இலங்கைத் தமிழ் மக்கள்
மலையகத்தில் ஒரு அங்கமாக ஆகியுள்ளனர். இவர்கள் இவர்களை மலையக மக்களாகவே
உள்வாங்கிக் கொள்ளவதா? என்கிற கலந்துரையாடல்கள் அவசியமாகின்றன.
ஏனெனில் மலையக மக்களின் கல்வி வேலைவாய்ப்பு வியாபாரம் மற்றும் பல்கலைக்கழக
அனுமதிகளில் இவர்களின் பங்களிப்பு மலையக மக்களோடு இன்று இரண்டரக்கலந்து
வருகின்றது. மலையக மக்களை விட மலையகத்தில் சொந்த காணி வீடு இவர்களுக்கு
வீதாசார ரீதியாக அதிகம் உண்டு. மலையக மக்களின் இந்த விட்டுக்கொடுப்புகள்
ஒரு உச்சத்தை அடைந்து கடந்த பொதுத் தேர்தலில் ஒரு பாராளுமன்ற
பிரதிநிதித்துவத்தை இலங்கைத் தமிழ் மக்களின் பிரதிநிதியாக மலையக மக்களின்
வாக்குகளில் இருந்து மலையக மக்கள் செறிவாக உள்ள மாவட்டத்தில் இருந்து
பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த பாராளுமன்ற அவையில் 11 பேராக இருந்த
மலையக மக்களின் பாராளுமன்ற பிரதிநித்துவம் இம்முறை சரிபாதியாக
குறைந்துள்ளது. நுவரெலியாவுக்கு அடுத்து அதிகமாக மலையக மக்கள் வாழும் பதுளை
மாவட்டத்தில் மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் முற்றாக
இழக்கப்பட்டுள்ளது. ஆனால் மலையக மக்களின் இதயப்பிரதேசமான நுவரெலியா
மாவட்டத்தில் இருந்து நுவரெலியா மாவட்டத்தில் இருந்து மாத்திரம் பெறப்பட்ட
ஐந்து பாராளுமன்ற ஆசனங்களில் ஒன்றை இலங்கைத்தமிழர் ஒருவர்
பெற்றுக்கொண்டுள்ளார். மலையக மக்களும் அவருக்கு வாக்களித்துள்ளனர். ஆனால்
அவரது தெரிவிற்கான மேலதிக வாக்குகளை நுவரெலியா மாவட்டத்தில் வாழும்
இலங்கைத் தமிழர்களே வழங்கியுள்ளனர்.
1947 ம் ஆண்டு அரசவையில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த
இந்திய வம்சாவளி மலையகத்தமிழர்களின் பிரதிநிதித்துவம் பலரின் கண்களை
குத்தவே 1948 க்கு பின்னர் மலையக மக்கள் குடியுரிமை
பறிக்கபட்டவர்களானார்கள். நாடற்றவர்களானார்கள். அந்த குடியரிமை பறிப்புக்கு
துணைநின்றவர்கள் தொடர்பிலான வாதப்பிரதிவாதங்கள் இன்றும்
தொடர்ந்துவருகின்றது. இந்திய அரசாங்கத்துடனான பல்வேறு ஒப்பந்தங்களுக்கு
மத்தியில் கணிசமானோர் இந்தியாவுக்கு திரும்பினர். அவ்வாறு திரும்பி சென்ற
மக்கள் இன்றும் கூட ‘சிலோன்காரர்கள்’ என அழைக்கப்படும் மனோநிலையே தமிழ்
நாட்டில் நிலவுகின்றது. வடகிழக்கு யுத்தத்தினால் இந்தியாவுக்கு அகதியாக
சென்றோர் தமிழ்நாட்டில் 30000 பேர்வரை அகதிமுகாம்களில் வாழ்கினறனர். தமிழ்
நாட்டில் மட்டும் அல்லாது கர்நாடகா அந்தமான் தீவுகள் ஆந்திராவிலும் கூட
இலங்கை மலையக மக்கள் வாழ்கின்றனர். இந்த நிலையில் இலங்கை இந்திய வம்சாவளி
மலையக மக்கள் குறித்த மீளாய்வை வேண்டி நிற்கும் ஒரு காலகட்டத்தில் நாம்
நிற்கிறோம்.
அண்மைய அவதானிப்புகள் மலையக மக்களின் இன்னுமொரு வகுதியினரை உள்
வாங்கிக்கொள்ளவேண்டிய தேவையை உணர்த்தி நிற்கின்றது. உலகம் முழுவதும் பரந்து
வாழும் மலையகத் தமிழர்கள் கனடா இங்கிலாந்து அவுஸ்திரேலியா ஐரோப்பிய
நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கையில் பதினைந்து லட்சம் பேர் என புள்ளிவிபரங்கள் காட்டும் மலையக
மக்கள் உலகம் முழுவதுமாக பரந்து 26 லட்சம் பேராக உள்ளனர். இந்த பதினைந்து
லட்சம் மக்களே பிரதான வேராக உள்ள நிலையில் அந்த எண்ணிக்கை பாதுகாப்பதும்
அந்த மக்களின் இருப்பு அரசியல் சமூக கலை பண்பாட்டு கூறுகளை பாதுகாத்தல்
இன்றைய நிலையில் ஒரு சவாலான விடயம் என்ற புரிதல் மலையக மக்கள் சார்ந்த
எல்லா வகுதியினருக்குமான பொறுப்பாக அமைகின்றது. கல்வி ரீதியாக இன்னும்
முழுமையான வளர்ச்சியை பதிவு செய்யாத இந்த சமூகம் தனது இருப்பைப்பாதுகாக்க
இனி எவ்வாறான உத்திகளை கையாளவேண்டியிருக்கும் என்பது அந்த சமூகத்தின்
முன்நிற்கும் பாரிய கேள்வி. மலையக மக்களின் வேரான தோட்டத் தொழிலாளிகளின்
எண்ணிக்கை இன்று வெறும் ஒரு லட்சத்து எண்பதினாயிரமாக குறைவடைந்துள்ளது. இது
மேலோட்டமாக பார்க்கின்றபோது சந்தோஷப்படக்கூடிய விடயமாகத்தான் தெரிகிறது.
ஏனெனில் தொடர்ச்சியாக தொழிலாளியாக இருக்க வேண்டுமா என்கிற கேள்விதான அது.
ஆனால் அவ்வாறு தோட்டத் தொழிலில் இருந்து விலகிச்செல்லும் மக்கள் தற்போது
என்னவாக இருக்கிறார்கள்? அவர்களது அரசியல் சமூகப் பண்பாட்டுத் தளம் யாது?
எனும் கேள்விகள் எழாமல் இல்லை. தொழிலாளியாக திரட்சிபெற்று தொழிற்சங்கம்
மூலமாகவும் அதனூடான அரசியல் மூலமாகவும் இருப்பை தக்கவைத்த இந்த மக்கள்
கூட்டத்தின் அரசியல் அடையாளமே இன்று கேள்விக்கு உட்பட்டு நிற்கிறது.
படித்தவர்கள் அல்லது வல்லமை பெற்றவர்கள் தொழிற்சங்க அரசியல்வாதிகளை
குறைகாண்பதோடு தங்களது சமூக அக்கறை நிறைவடைந்து விடுவதாக நினைத்துவிடுவது
அபத்தமானது.
மலையக மக்களின் ஒவ்வொரு சமூகக் குழுமமும் ஒரு பண்பாட்டுத்தளத்தில் இணைந்து
தமது சமூக இருப்பை உறுதிசெய்துகொள்ளும் அவசியம் மிக விரைவில்
வேண்டப்படுகிறது. இதற்கு புலம்பெயர் மலையகத்தமிழர்களின் பலம் அதிகம்
வேண்டப்படுகிறது என்பதே யதார்த்தமானது. ஒப்பீட்டு ரீதியில பொருளாதார
ரீதியாக முன்னால் செல்லும் புலம்பெயர் மலையகத்தமிழர்கள் (இந்தியா
தவிர்த்து) இந்த சமூகம் குறித்த பார்வையை மேலும் விரிவுபடுத்தவும்
விசாலப்படுத்தவும் காலம் கணிந்துள்ளது. புலம்பெயர் இலங்கைத்தமிழர்கள்
மத்தியில் தோன்றியிருக்கக்கூடிய அமைப்பாக்க சிந்தனைகளுடன் ஒப்பிடும் போது
மலையகம் சார் புலம்பெயர் மக்களின் செயற்பாடு இன்னும் விரிவுபடவேண்டிய தேவை
இருப்பதை உணரமுடிகிறது.
மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து பரப்புரைகளை விரிவுபடுத்துவது
முதலாவது தேவையாக உள்ளது. இந்த மக்களின் பிரச்சினைகள் சர்வதேச கவனத்தைப்
பெறவேண்டும். சர்வதேச கவனத்திற்கு முன்பாக அவர்களின் தாயக பூமியான
இந்தியாவுக்கு மலையக மக்கள் பற்றிய கவனம் கொண்டுச்செல்லப்படவேண்டிய
தேவையுள்ளது. இந்தியாவில் இலங்கைத் தமிழர்களைப்பபற்றி தெரிந்து
வைத்திருக்கிற அளவுக்கு மலையக மக்களைப்பற்றி தெரியாது என்பது கசப்பான
உண்மை. அவர்கள் அடிக்கடி சொல்லும் தொப்புள் கொடி உறவு யார் என அதனை
உச்சரிப்பவர்களுக்கே தெரியாது.<
இன்றைய நிலையில் இலங்கை இந்திய வம்சாவளி மலையக மக்கள் குறித்த சர்வதேச
பரப்புரை இன்றியமையாதது. மலையக மக்கள் எந்தெந்த நாடுகளில் வாழ்கிறார்களோ
அங்கெல்லாம் மலையக மக்கள் குறித்த கலந்தரையாடல்கள் எழுத்துக்கள்
பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவேண்டும். குறைந்த பட்சம் சமூக வலைத்தளங்களையாவது
(முகநூல் போன்ற) இந்த பரப்புரைகளுக்கு பயன்படுத்தும் அர்ப்பணிப்பு
ஒவ்வொரு மலையகத்தமிழர்களிடத்திலும் ஊற்றெடுக்க வேண்டும். இன்று உலகம் ஒரு
கிராமமாக மாறியிருக்கிறது. ஆனால் மலையகத் தோட்டங்கள் எனும் கிராமங்களே
உலகம் எனும் வாழும் மக்களே மலையக மக்களின் அரசியல் இருப்பைத்
தக்கவைக்கின்றனர் என்பது உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டும். அவர்கள்
போராடி காத்துவரும் அந்த இருப்பை உறுதி செய்ய உலகம் முழுவதும் வாழும்
ஒவ்வொரு மலையகத்தமிழரும் உறுதி கொண்டு எழ வேண்டும். நன்றி .namathumalayagam.com/
No comments:
Post a Comment